இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் 17/12/1946ம் ஆண்டு டெல்லியில் உள்ள அரசியலமைப்பு அரங்கத்தில் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபை கூட்டத்தில் பாரதிய ஜன சங்கத்தின் நிறுவன தலைவர் டாக்டர்.சியாம பிரசாத் முகர்ஜி அவர்கள் பேசியதாவது,
“பிரிட்டிஷ் மக்களிடம் இறுதியாக ஒரு முறை தெளிவாகச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறோம்: உங்களுடன் நாங்கள் நட்புடன் இருக்க விரும்புகிறோம். இந்த நாட்டில் நீங்கள் வர்த்தகர்களாக உங்கள் பயணத்தைத் தொடங்கினீர்கள். முகலாயர்களிடம் கெஞ்சி கூத்தாடி மன்றாடி எங்கள் தேசத்திற்கு வந்தீர்கள். இந்த நாட்டின் செல்வத்தைச் சுரண்ட விரும்பினீர்கள். அதிர்ஷ்டம் உங்களுக்குச் சாதகமாக இருந்தது. போலியான ஆவணங்கள், ஏமாற்று வேலை, மோசடி மற்றும் பலாத்காரம் மூலம் — இந்த நாட்டில் உங்கள் ஆட்சியை நிலைநாட்டினீர்கள் என்பது தான் வரலாறேயன்றி இந்த நாட்டு மக்களின் விருப்பதுடனோ, ஒத்துழைப்புடனோ அல்ல. நீங்கள் ஜாதி ரீதியாக தனித் தொகுதிகளை அறிமுகப்படுத்தினீர்கள், இந்திய அரசியலில் மதத்தை அறிமுகப்படுத்தினீர்கள். ஆம், இந்தியர்கள் ஜாதி ரீதியாக தொகுதிகளை அறிமுகப்படுத்தவில்லை, இந்த நாட்டில் உங்கள் ஆட்சியை நீடித்து நிலைநாட்டுவதற்காக நீங்கள்தான் செய்தீர்கள். அதன் மூலம் இந்த நாட்டில் நீங்கள் சுயநலம் கொண்ட தீய சக்திகளை உருவாக்கியுள்ளீர்கள், அவை இப்போது போதுமான அளவு சக்தி பெற்றுவிட்டன, அந்த தீய சக்திகளின் சொந்த விருப்பம் மற்றும் ஒத்துழைப்பின்றி இப்போது அழிக்க முடியாத நிலையை எட்டியுள்ளன. இவை அனைத்தையும் மீறி, எதிர்காலத்தில் நீங்களும் இந்தியாவும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்று உண்மையிலேயே விரும்பினால், உங்கள் ஒத்துழைப்புக் கரத்தை நாங்கள் ஏற்கத் தயாராக இருக்கிறோம். ஆனால், இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினைகள் தொடர்பாக பிரிட்டிஷ் அரசு தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை என்பதோடு அது உங்களின் வேலையுமல்ல. ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் சொந்த உள்நாட்டுப் பிரச்சினைகள் இருக்கும், துரதிர்ஷ்டவசமாக இந்தியாவுக்கும் அதன் உள்நாட்டுப் பிரச்சினைகள் உள்ளன, மேலும் அந்த உள்நாட்டுப் பிரச்சினைகள் இறுதியில் இந்த நாட்டு மக்களாலேயே தீர்க்கப்பட வேண்டும்.”
இந்தியாவின் சுதந்திரத்திற்கும், சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கும் அரும்பாடுபட்ட இந்தியாவின் முதல் தொழில் துறை அமைச்சர் டாக்டர் சியாம பிரசாத் முகரஜி அவர்களின் 125 வது பிறந்த தினமான இன்று அவருக்கு என் வணக்கங்களும், மரியாதையையும் உரிதாக்குகிறேன்.
நாராயணன் திருப்பதி.